anuga@arivumathi.com
+1 201 203 7321

About – Tamil

அறிவுமதி, புகழ் பெற்ற தமிழ்க் கவிஞரும் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். அறிவுமதியின் இயற்பெயர் ‘மதியழகன்’. தனது நண்பர் ‘அறிவழகன்’ பெயரையும், தனது பெயரையும் சேர்த்து ‘அறிவுமதி’ என்று வைத்துக்கொண்டார். இவர் விருத்தாசலம் நகருக்கு அருகில் உள்ள  சு.கீணணூரில் கேசவன்- சின்னப்பிள்ளை  (சான்று இரெ.சுப்பிரமணியனின் ‘அறிவுமதி கவிதைகள்- ஓர் ஆய்வு’ என்னும் நூல்) இணையருக்கு மகனாகப் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவரின் தமிழ் இலக்கியத்தின் மீது இருந்த விருப்பத்தைக் கண்டு கவிஞர் மீரா கவிஞர் அப்துல் ரகுமானிடம் அறிமுகப்படுத்தினார். மறைந்த திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவின் ஏழு படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்

 

படைப்புகள்[தொகு]

கவிதைத் தொகுப்பு[தொகு]

 • அவிழரும்பு
 • என் பிரிய வசந்தமே
 • நிரந்தர மனிதர்கள்
 • அன்பான இராட்சசி
 • புல்லின் நுனியில் பனித்துளி
 • அணுத்திமிர் அடக்கு
 • ஆயுளின் அந்திவரை
 • கடைசி மழைத்துளி
 • நட்புக்காலம்
 • மணிமுத்த ஆற்றங்கரையில்
 • பாட்டறங் கவிதைகள்
 • அறிவுமதி கவிதைகள்
 • வலி

சிறுகதைத் தொகுப்பு[தொகு]

 • வெள்ளைத் தீ

குறும்படம்[தொகு]

 • நீலம்

பாடல் எழுதிய படங்களின் வரிசை

பாடல்கள்[தொகு]

நட்புக்காலம்[தொகு]

அறிவுமதியின் மிகச்சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. இந்த நூல் ஆண் ‍ பெண் நட்பை வைத்து எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு.

வெளி இணைப்புகள்[தொகு]

உங்க சிறு வயது அனுபவங்கள் பற்றி சொல்லுங்களேன்.

விருத்தாசலத்திற்கு அருகில் உள்ள தூக்கினனூர் என்ற சின்னஞ்சிறிய ஊரில் பிறந்தவன். மணிமுத்தாறு என்ற வெள்ளிமலையிலிருந்து இறங்கி வருகிற ஆற்றில் 14 ஆண்டுகள் குளித்த அந்த ஈரம் தான் மணிமுத்தாறு என்கிற அந்த அம்மாவின் ஈரம்தான் இன்னும் என் விரல் வழியே கவிதைகளாக, எழுத்துக்களாக கசிந்து வந்து கொண்டிருக்கின்றன என்று கருதுகிறேன். ஆறு ஓடினாலும் எனது ஊர் ஒரு புன்செய்க் காடாகத்தான் இருந்தது. அங்கே கம்பு, நெல், கேழ்வரகு, பச்சைப் பயறு, தட்டைப்பயறு, சாமை, திணை என என்தாய் மடிகணக்க விதைகளை அள்ளி அள்ளித் தெளித்து பயிர் வைத்து வாழ்ந்த அந்த வயல்வெளிகளில் நான் ஓடித் திரிந்தேன்.
 
அந்த காலக்கட்டங்களில் என்னுடைய உழைக்கும் அந்த தாய்கள், தந்தைகள், பாட்டன்கள், பாட்டிகள் அள்ளிக் கொடுத்த நாட்டுப்புறப் பாடல்கள்தான் என் காதுகள் வழியே உள் நுழைந்து என் இதயம் நிறைய அது கூடு கட்டிக் கொண்டிருக்கிறது. அவற்றிலிருந்து சிறகடிக்கிற பறவைகளாகத்தான் இன்று என் எழுத்துக்களாக இருந்தாலும், பாடல்களாக இருந்தாலும், சிந்தனைகளாக இருந்தாலும் அனைத்தும் அந்த புன்செய் காட்டு என் மூதாதையர்கள் போட்ட பிச்சை அல்லது பரிசு என்றுதான் சொல்வேன்.

புதிதாக எழுத வருகிறவர்களுக்கும், புரிதலோடு எழுத வருகிறவர்களுக்கும் ஒரு தமிழ்ப் பாலமாய் விளங்குகிற நீங்கள் கவிஞராயிருந்து பாடலாசிரியராய் வளர்ந்த பயணம் பற்றிச் சொல்லுங்கள்.

என்னுடைய உழைக்கும் மக்களுடைய பாடல்களை உள்வாங்கி வைத்திருந்தேன். அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வ.சுப.மாணிக்கம், தண்டபாணி தேசிகர், வெள்ளை வரனார் போன்ற பழம்பெரும் பேராசிரியர்கள் எனக்கு அள்ளிக் கொடுத்த தமிழ் செம்மையோடும்தான் சென்னைக்குச் சென்றேன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘முருகன் நடுகல் வீரனே’ என்கிற முனைவர் பட்டத்திற்கான ஆய்வாளனாகத்தான் அங்கே சென்றேன். ஆனால் திரைப்பட உலகில் இயக்குனர்கள் பாக்யராஜ், பாரதிராஜா, பாலுமகேந்திரா ஆகியோரிடம் நான் ஏறக்குறைய 10, 15 படங்களுக்கு உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளேன்.
 
அந்த காலகட்டத்தில் நான் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்ற உணர்வோடுதான் அந்த திரையுலகத்திற்குள் நுழைந்தேன். என்னுடைய ஆண் தாய் என்று சொல்லத்தக்க அளவிற்கு என் உள்ளத்தில் ஊடுருவியிருக்கும் பாரதிராஜா அவர்களுடைய 16 வயதினிலே என்கிற திரைப்படம்தான் என்னையும், என்னைப் போன்றவர்களையும் நீங்களும் திரைப்பட இயக்குனர்களாக வரலாம். திரைக்கதை எழுதலாம், பாடல் எழுதலாம் என்கிற நம்பிக்கை ஊட்டிய படம். அதுவரையிலும் திரைப்பட உலகம் என்பது தமிழர்களுக்கு அதுவும் அடிநிலைத் தமிழர்களுக்கு ஒரு இரும்புக் கோட்டையின் சுவர் எப்போது திறக்கும், திறக்காது என்கிற அவநம்பிக்கையிலேயே இருந்த தமிழர்களுக்கு அந்த இரும்புக்கதவை உடைத்து எங்களையும் உள்நுழைய வைத்த உணர்வுகளுக்குக் காரணமானவர் எம் ஆண் தாய்கள் இசைஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோர். அப்போது அந்த தளத்தில் என் நண்பர்கள் ஆங்காங்கே நீ எழுது, எழுது என்று சொன்ன போது நான் இயக்குனராக வேண்டும் என்பதற்காக மறுத்து வந்தேன்.
 
அந்த காலகட்டத்தில் தான் ‘கிழக்குச் சீமையிலே’ என்கிற படத்தில் பாரதிராஜா அவர்களோடு இணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த என் உணர்வுகளைக் கவனித்த அண்ணன் தயாரிப்பாளர் தாணு அவர்கள் ‘நான் சிறைச்சாலை என்கிற ப்ரியதர்ஷனின் படத்தின் தமிழ்மொழியை எடுக்கிறேன். அதில் உரையாடல்கள், பாடல்கள் அறிவுமதி என்று போடப் போகிறேன். என்ன சொல்கிறாய்’ என்று கேட்க நான் மறுக்காமல் சரியென்று சொல்லிவிட்டேன். சிறைச்சாலை என்கிற படத்தில் இசைஞானியின் மெட்டுக்கு நான் எழுதிய பாடல்கள்தான் ‘செம்பூவே பூவே’, ‘மன்னன் கூறைச்சேலை’, ‘சுட்டும் விழிச் சுடர் பார்வையிலே’, ‘ஆலோலங்கிளி தோப்பிலே’, ‘இது தாய் பிறந்த தேசம்’, என்கிற 5 பாடல்கள். அது உலகத் தமிழர்கள் அனைவரின் இல்லத்திற்கும் அழைத்துச் சென்று அவர்களுடைய செல்லப் பிள்ளையாக என்னை அறிமுகம் செய்து வைத்தன.

திரைத்துறையின் போக்கு இப்போது எப்படி இருக்கிறது? 
இப்போது திரைப்படத்துறையின் அகப்போக்கு சரியானதாக, திருந்தியதாக தெரியவில்லை. ஆனால் புறப்போக்கு என்று பார்க்கிற போது தமிழ் இன உணர்விற்கும், உலகத்தில் எங்கே தமிழன் காயப்பட்டாலும் அதற்கு மருந்து தடவ நாங்களும் தயாராக இருக்கிறோம் என்கிற உணர்வுகளை இன்றைக்கு திரைப்படத்துறை காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் திரைப்படத்துறை என்பது பல்வேறு வகையான இன் மக்களுடைய கூத்துப்பாடல்கள், நடவுப் பாடல்கள், தாலாட்டுகள், தெம்மாங்குகள், ஒப்பாரிகள், அவர்களுடைய கூத்து அடவுகள் அனைத்தையும் உள்வாங்கிய ஒரு நவீன துறைதான். அந்த தமிழ்த்திரைத்துறை என்பது தமிழர்களுக்கானத் திரைத்துறையாக இன்னும் முழுமையாக ஒரு வெற்றியைக் காட்டவில்லை.
 
தமிழில் எடுக்கப்படுகிற திரைப்படங்களாக இருக்கின்றன. ஆனால் தமிழர்களுக்கான திரைப்படங்களாக இருக்கின்றனவா என்றால் இல்லையென்றே சொல்லலாம். எனவே இந்தப் போக்கு அதாவது தமிழர்களுக்காக எடுக்கப்படுகிற 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், உதிரிப்பூக்கள், பருத்திவீரன் போன்ற தமிழர்களுடைய முகங்கள், தமிழர்களுடைய கதாபாத்திரங்கள், தமிழர்களுடைய வாழ்வியலினுடைய பல்வேறு வகையான தளங்களை இன்னும் முழுமையாக திரைக்கதையாக்கத்திற்குள் கொண்டு வர வேண்டும்.
 
அதன் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை எடுத்து அலசுகிற திரைப்படங்கள் இன்னும் அதிகமாக வருமானால் அந்த நாளில்தான் இது செழித்த திரைப்படத்துறையாக, தமிழர்களுக்கான கலைத்துறையாக நான் ஏற்றுக் கொள்வேன். அதற்கான முயற்சிகளில் இன்றைக்கு பல்வேறு வகையான என்னுடைய இளைய தம்பிகள் இயக்குனர்களாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கை விதை ஆங்காங்கே முளை விட்டுக் கொண்டிருக்கின்றன.

திரைத்துறையில் பாடலாசியருக்கான மதிப்பு எப்படி இருக்கிறது? 
இன்றைக்குப் பாடலாசிரியருக்கான மரியாதை என்பது ஏறக்குறைய அனைத்து மக்களும் யார் எழுதிய பாடல் என்று தெரிவதற்கு ஊடகங்கள் இன்னும் உதவி செய்யாத ஒரு சோகம் இருக்கத்தான் செய்கிறது என்பதை இந்த ஊடகத்தின் வாயிலாகவும் பதிவு செய்கிறேன். இசையமைப்பாளர் பெயர்களைச் சொல்கிறார்கள், எந்த படம் என்று சொல்கிறார்கள், இதை எழுதியவர் யார் என்று மட்டும் சொல்வதில்லை.

 
ஆனாலும் பாடலாசிரியர்கள் தளத்தில் கண்ணதாசன், வைரமுத்து, வாலி என்று அதீதமாக தெரிந்து கொள்ளப்பட்ட முகங்களை, பெயர்களைத்தான் சொல்கிறோமே தவிர, ஆலங்குடி சோமு, தேவநாதன், சுரதா, மாயவனார், மருதகாசி, பூவை.செங்குட்டுவன், புலமைப் பித்தன், யுகபாரதி, கபிலன், தாமரை, தேன்மொழி என்று வரிசை கட்டி 10 பாடல்கள் எழுதினாலும் அந்த பாடல்களுக்குள்ளாகவும் சிறப்பாகத் தமிழை நிறுத்துகிறார்கள் என அறிமுகப்படுத்த தவறுகின்றன என்ற குற்றச்சாட்டினை இங்கே முன் வைக்கிறேன்.

‘73, அபிபுல்லா சாலை’ நிறைய படைப்பாளிகளை தமிழுலகுக்குக் கொடுத்திருக்கிறது. இது தாங்கள் திட்டமிட்டு செய்த பணிதானா? 

‘73, அபிபுல்லா’ சாலை இன்று ‘181 அபிபுல்லா’ சாலையாக மாறியிருக்கிறது. எண்தான் மாறியிருக்கிறதே தவிர என்னுடைய எண்ணங்கள் மாறவில்லை. என்றைக்கும் தமிழ்நாட்டின் எந்த மூலை முடுக்குகளிலிருந்து வருகிற இளைஞர்களுக்கும் ஒரு தாய்மைக் கூடாக இருந்து பல படைப்பாளிகளைத் திரைத்துறைக்கு வார்த்தெடுக்கக் கிடைத்த ஒரு தமிழ்க்கூடாகத்தான் பார்க்கிறேன். இன்றைக்கு அந்த சூழல் இருக்கிறதா என்று என்னால் சொல்ல முடியவில்லை.
 
ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கேதான் பழநி பாரதி, முத்துக் குமார், யுக பாரதி, கபிலன் என பாடலாசிரியர்களான என் தம்பிகள், இதைப் போலவே இயக்குனர்களான சுந்தர்.சி, சீமான், செல்வ பாரதி, கவிதா பாரதி, ஜெயா என வரிசை கட்டி பல தம்பிகள் இங்கே தான் வளர்ந்தார்கள். என்னுடைய வளர்ச்சி அல்லது வளர்த்தெடுத்தேன் என்று சொல்வதை விட அந்த புன்செய்காட்டில் வளர்ந்த சூழல்தான் காரணம் என நினைக்கிறேன்.
 
முருங்கை மரத்தில் ஏறி காய்பறிக்கச் சொல்கிற கைகள் நான் இருபதோ, முப்பதோ பறித்துக் கொடுத்தால் முதலில் பதினைந்து காய்களை ‘அந்த அத்தை வீட்டுக்குக் கொண்டு போய் கொடுத்திட்டு வா, மாமா வீட்டுக்குக் கொண்டு போய் கொடுத்திட்டு வா, சித்தப்பா வீட்டுக்குக் கொண்டு போய் கொடுத்திட்டு வா, பெரியப்பா வீட்டுக்குக் கொண்டு போய் கொடுத்திட்டு வா’ என்று பல வீடுகளுக்கு அந்த முருங்கைக்காய்களை பறித்த என் கைகளாலேயே கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்து நான்கு முருங்கைக்காய்களைத்தான் என்னுடைய வீட்டுக்குள் எடுத்துச் செல்ல என்னை அனுமதிப்பார்கள்.
 
எனவே நமக்குக் கிடைத்த ஒன்றை அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிடுத்தான் நாம் ருசி பார்க்க வேண்டும் என்று சொன்ன என் அம்மாவின், என் மூதாதையர்களின் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற பண்பாட்டுத் தளத்தினுடைய வெற்றியாகத்தான் இந்த 73, அபிபுல்லாசாலையை பார்க்கிறேனே தவிர தனித்த அறிவுமதியினுடைய ஒரு குணமாகப் பார்க்கவில்லை

73 அபிபுல்லா சாலை நிறைய படைப்பாளிகளைத் திரையுலகுக்குத் தந்திருக்கிறது. இந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. 73 அபிபுல்லா சாலை மட்டும்தான் ஆலமரம் என்பது அல்ல. என் தம்பிகள் இருக்கும் ஒவ்வொரு இடமும் ஆலமரமாகி அவர்களும் என்னைப் போலவே பல படைப்பாளிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த தோப்பாக இந்த தனிமரம் வளர்ந்து செழித்திருக்கிறது என்ற மகிழ்ச்சியை உள்ளம் நெகிழ பகிர்ந்து கொள்கிறேன்.

இப்போதும் அந்த வழிகாட்டுதல்கள் தொடர்கிறதா? 
வழிகாட்டுதல் தொடர்கிறது. ஆனால் வருகிறவர் இதுதான் பாலாவை நான் பாலுமகேந்திராவிடம் அறிமுகப்படுத்தினேன் என்ற கட்டுரையைப் படித்துவிட்டு மேம்போக்காக வருகிறார்கள். அதற்கான திறமையும் அடையாளப் பதிவுகளும் இல்லாமல் என்னை வந்து பார்த்துவிட்டால் திரைப்பட உலகிற்குள் நுழைந்துவிடலாம் என்கிற ஆசையோடு வருகிறார்களே தவிர அவர்களுடைய அந்த திறமையின், முயற்சியின், வலிகளின் அடையாளங்களை எனக்கு காட்டியவங்களாக பெரும்பகுதி வரவில்லை என்பது ஒரு சோகமாத்தான் நான் பார்க்கிறேன்.

திடீர்னு விவசாயத்துல கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டீர்களே ஏன்? 
16 வயது வரை எந்த வாழ்க்கையை வாழ்ந்தேனோ, எந்த மண்ணில் வளர்ந்தேனோ அங்கே இப்போது சென்றிருக்கிறேன். விவசாயக் குடும்பங்களின் பண்பாட்டில் ஊறி வளர்ந்த நான் இதுதான் திணை, சாமை, வரகு, என்று என் பிள்ளைகளுக்கு காட்டுவதற்கு அந்த மண்ணில் அந்த பயிர்கள் விளையவில்லை. எல்லாம் செயற்கையாகி விட்டது. 40, 50 மாடுகள் வளர்த்த குடும்பத்தில் இன்று ஒரு மாடு கூட இல்லை என்ற சோகம் எனக்குள் எப்போதும் இருந்துவருகிறது. இப்போதுதான் அதை உறைப்பாக உணர்ந்தேன்.

 
நம்முடைய அடையாளங்களை இழந்துவிட்டு, நமது மொழியை இழந்துவிட்டு, தமிழினம், தமிழன் என்று சொல்வதற்கு நமக்கு உரிமையே கிடையாது. அதனால்தான் மறுபடியும் எனது ஊருக்கு வந்திருக்கிறேன். அங்கே என்னுடைய மண்ணில் மண்புழுக்களே இல்லாத வயல்வெளிகளைப் பார்க்கிறேன். மறுபடியும் எனது மண்ணில் மண்புழுக்களை நெளிய விடுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன். அதைப் போலவே என்னுடைய மரபு சார்ந்த மரங்களை நட்டு வைத்திருக்கிறேன். செயற்கை உரம் போடாமல் இயற்கை உரத்திலேயே விளைகிற காய்கறிகளை இப்போது என் தோட்டத்தில் போய் நான் பறித்து சாப்பிட தொடங்கியிருக்கிறேன்.
 
தமிழில் ஆங்கிலம் கலப்பது எவ்வளவு கொடுமையானதோ அப்படித்தான் நம்முடைய மண்ணில் நம் இனம் சாராத அந்த தைல மரங்களை நடுவதும் என்கிற உணர்ச்சியை என் மண் இப்போது எனக்குச் சொல்லியிருக்கிறது. என் மண் என்பது என் தாய். அந்த தாயைக் களங்கப்படுத்தக் கூடாது. அவளை மறுபடியும் கழுவிக் குளிப்பாட்டி அவள் முகத்தில் ஒரு ஆதிப் புன்னகையை மீண்டும் நான் பார்க்க வேண்டும் என்கிற பசிதான் ஒரு எழுத்தாளன் விவசாயியாக மாறக்காரணம். ஒரு மண்ணில் ஒரு விதையை நட்டு, முளைவிட்டு அதிலிருந்து பசுமை பார்க்கிறவன்தான் எழுதுவதற்கே லாயக்குள்ளவன் என்கிற உணர்ச்சியை என் மண்தாய்தான் எனக்கு ஊட்டி வைத்திருக்கிறாள்.

நீங்கள் திரைத்துறையிலிருந்து விலகக் காரணம்? 
திரைத்துறையிலிருந்து நான் விலகவில்லை. இப்போதும் நான் குறும்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். பாடல் எழுதியதிலிருந்து விலகியது என்பது இன்றைக்கு வருகிற பாடல்கள் அனைத்தும் பெண்களை உடல்ரீதியாக வர்ணிக்கச் சொல்கிற பாடல்களாகவே பெரும்பகுதி இருக்கின்றன. அத்தகைய சூழலில் பெண்களைக் கொச்சை செய்யும் பாடல்களை உடல் உறுப்புகளை வர்ணிக்கிற பாடல்களை எழுதிவிடக்கூடாது என்ற உணர்வோடுதான் நான் அதை மறுத்தேன்.

 
அதுமட்டுமல்ல தங்கள் உடலுறுப்புகளை இழந்தபிறகும் கூட தங்களுடைய இனத்தின் விடுதலைக்காக பொறுப்புணர்வுகளை இழக்காத தம்பி, தங்கைகள் போராட்டக் களத்திலே போராடிக் கொண்டிருக்கிற தமிழ் வாழ்வியல் சூழலில் அந்த தங்கைகளுடைய உடல் உறுப்புகளை வர்ணித்துதான் நான் காசு வாங்கி என் பிள்ளைகளுக்கு உடைகள் வாங்கித் தர வேண்டும் என்றால் அது கேவலமான வாழ்க்கை என்றுணர்ந்தே இந்த முடிவை எடுத்தேன்.

ஒரு கவிஞனுக்கு நிம்மதி எது? 
உலகம் எந்தவித அணுஆயுத சோதனைகளும் இல்லாமல் எந்தவித போருமில்லாமல் அனைத்து மக்களுக்குமான, போர்க்குண்டுகள் விழாத வானத்தை என்றைக்கு அவன் உணர்கிறானோ அன்றைக்குத்தான் கவிஞனுக்கு அமைதி. ஏனென்றால் கவிஞன் என்பவன் உண்டு, களித்து ஏதோ மிதப்பவனாகத்தான் சமூகமே கருதுகிறது. அல்ல அல்ல. உலகத்தின் எந்த மூலையிலும் ஒரு வண்ணத்துப் பூச்சி காய்மபட்டாலும் கூட அதற்கு மருந்து தடவ வேண்டும் என்ற தேடல் உள்ளவன்தான் கவிஞனாக இருக்க முடியும் என்ற தளத்தில் சொல்கிறேன்.
 
எந்த மண்ணிலும் போர்கள் இருக்கக் கூடாது. எந்த மக்களையும், எந்த வல்லாதிக்க உணர்வுகளும் நசுக்கக் கூடாது. குருதி கசிவு கூடாது. கண்ணீர் கசிவு கூடாது. போர் அமைதி, போர் நிறுத்தம் என்கிற நிம்மதியை உலகம் முழுதும் என்றைக்கு ஒவ்வொரு இனத்திற்கும் உரிமையாக்குகிறதோ, நான் இன்னொருவனுக்கு அடிமை இல்லை. இன்னொருவனை அடிமையாக்கவும் மாட்டேன் என்று நினைக்கிற சமூகத்தை என்றைக்கு உணர்கிறானோ அன்றைக்குத்தான் கவிஞன் நிம்மதியடைவான்.

கவிஞனுக்கான தகுதிகளாக எதைச் சொல்வீர்கள்?
இயற்கையின் பிள்ளையாய், காயத்திற்கான மருந்தாய் தன்னை உணர வேண்டும், உணர்த்த வேண்டும். அதுதான் அவனுடைய தகுதிகளாக நான் பார்க்கிறேன்.

நட்புக்காலத்தின் வெற்றி எதிர்பார்த்ததுதானா? நட்புக்காலம் & 2 என்று ஏன் கொண்டு வரவில்லை?
நான் ஏறக்குறைய ஒரே இரவில் 60, 70 கவிதைகள் எழுதினேன். அந்த கவிதைகளைத்தான் இன்றைக்கு நீங்கள் நட்புக்காலமாகப் பார்க்கிறீர்கள். இந்த நட்புக்காலம் எழுதிமுடித்துவிட்ட பிறகு தம்பி பழநிபாரதி, தபு சங்கர் போன்றவர்களும் நானும் உட்கார்ந்துதான் கவிதைகள் எது எது அச்சுக்கு வரலாம், எதுயெது வேண்டாம் என்று முடிவு செய்து இந்த 40 கவிதைகளாக முதலில் வெளியிட்டோம். அதை வெளியிடுகிற போது இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் எண்ணவில்லை.

ஏராளமான காதல் கவிதைகளே வந்து கொண்டிருக்கிற நேரத்தில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான ஒரு நட்பைச் சொல்லுகிற அந்த முயற்சி எனக்கு அன்றைக்கு புதிதாக இருந்தது. அதனை எனது திரைப்பட இயக்குனர்களான தம்பிகள் பலரும் படித்து விட்டு இந்த சிந்தனையே சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். அந்த சூழலில் தமிழக மக்களும், உலகத தமிழர்களும் இவ்வளவு பெரிய வரவேற்பைக் கொடுப்பார்கள் என நினைக்கவில்லை. ஆனால் இந்த வரவேற்பு என்பதெல்லாம் அறிவுமதிக்கான வரவேற்பாக நான் கருதவில்லை. இது புஞ்சைக் காட்டு வெளிகளிலே என்னோடு பழகிய தோழியர், தோழர்கள் இவர்களோடு நான் வாழ்ந்த வாழ்க்கை.

 
ஆண், பெண் என்ற பிரிவில்லாமல் ஆற்றிலே ஆடைகளைக் களைந்து விட்டு நாங்கள் முழுநிர்வாணமாக குளித்துக் கரையேறியவர்கள். அங்கே எந்த பால் முரண்பாடுகளையும் உணர்ந்ததில்லை. அது போலவே சோளக்காடுகளின் அந்த பரண்களால் ஏறி அமர்ந்து கொண்டு அவர்கள் முந்தானைகளில் வைத்து அடித்துக் கொடுத்த காக்கைச் சோளத்தை வாங்கித் தின்ற அந்த பால் பருவத்திலும் பால் முரண்பாடுகள் வந்ததில்லை. எனவே நட்புக்காலத்தின் வெற்றியும், வரவேற்பும் வாழ்த்தும் என்னுடைய அந்த புன்செய் காட்டின் அழுக்குப் படாத அந்த நட்பு வாழ்க்கை, நட்பு உறவுகள், நட்பு தோழிகள் அவர்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டும்.